Sri Vaikunta Ekadasi was also a writers' festival some decades back. I was lucky to see it in my life upto 60s and 70s. What I mean is in Srirangam, during the Nacchiyar Tirukkolam and Sri Vaikunta Ekadasi, many book releases, poetry forums used to be conducted. And another thing, which has become almost invisible, is various groups from villages used to sing Bhajans, Songs during this time. Now whether any such thing is there I do not know. Yea times are changing, people's preferences do change. Why I am saying this is for a reason. Some ten years back I was writing seriously a Kavyam in Tamil, which has run to more than 5000 lines as I count now. And somehow I scheduled it off, postponed touching it and now after many years suddenly an interest has cropped up to continue that to the finish. That too during Sri Vaikunta Ekadasi is so apt and seems to be blessed. While beginning I was rashly ambitious to put the end only after 25000th line. But I do not know now how far I will be able to do. Sometimes in the West, they give something like 'work in progress', that is some portions they leak out so that readers can get a foretaste of the work. Like that I wrote one introduction along with some lines from the epic. --
தமிழனாய்ப் பிறக்கக் கொடுத்து வைத்தேன். நல்ல தந்தை தாய், ஆசிரியர்கள், நண்பர்கள், வளர்ந்த சூழல், உள்ளே படுத்துக் கொண்டிருப்பவன், உரகச் சுற்றாய் அரவணைக்கும் தடமதில்கள், உள்ளத்தைக் கால்கட்டும் உவகைப் பெருக்காய் நான் வளர்ந்த தமிழின் மடி, ஊருண் கேணியாய்த் தொட்டு வைத்த சங்கப் பொய்கை, உலகு புரக்கும் மும்முலையாய்ச் செந்நாப்போது, உன்னித்தெழுந்த தடமுலையாய்த் திருவாய்மொழித்தலைவி, உவட்டாமல் இனிப்பதுவாய் மூவர்மொழி, உலகளந்த திருவடியாய்க் கம்பன் பரிசு, உலா வரும் கலைச் செப்பாய் இளங்கோவின் கைச்சிலம்பு, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ச் சிரபுரத்தான் தந்த சீர்வரிசை, சந்தக் கொழிப்பின் மந்தாகினியாய்ச் சருவி வரும் தமிழின் கிரி, இல்லை இல்லை பெருக்கம் அன்பில் அமிழ்த்தும், பேருலகு காணத் தவிக்கும் மனிதனைப் பேணி வளர்க்கும் தமிழின் மகன் காவியம் பாடுவதில் வியப்பில்லை.
மேலை நாடுகளில் ஒரு பழக்கம் உண்டு. அட்டும் சுவையுணவின் ஒரு சிப்பத்தை இதழ் பருகக் கொடுத்துக் களிக்கும் பழக்கத்திற்குப் பெயர் work in progress. அதுபோல் இன்னும் கண் திறக்காத காவியத்தின் கலையெழிலை ஒப்பனைக்கு முன்னர் ஒரு சில பிரிகதிராய் உமக்குக் கொடுத்துக் களிக்க நினைத்தோம். உவட்டாமல் இனிப்பதுவோ உறுத்துவதாய் இருப்பதுவோ யாமறியோம் பெரும! உண்டுடுத்து உரையாடி ஒலியடங்க உயிர்ப்படங்கும் வாழ்வில், உன்மத்தம் என்று நீர் நினைத்தாலும், உன்னதமாய்ச் சில கணங்கள் தேக்கி வைத்தேன் தீந்தமிழில்.
திரைத்து வரும் கங்குல். தமிழ் ஏங்கிக் காத்திருக்கும். புலரி வாராமற் போகாது, பொற்கதிராய் என்மகவோர் வந்து தழுவும் நாளும் தொலையாது, ஆயினும் ஆழியென நீளும் தனிமை, அதில் ஓர் அகலெடுத்துச் சென்று அருந்தமிழின் கண் மலரும் நீர் வழித்த இனிமை என் பங்கு. காவியம் எதைப் பற்றி எனப் பலரும் கேட்டதுண்டு. காலத்தின் கரை வீற்ற நித்யங்களைப் பற்றித்தான் காவியம் கதுவியெழும். நித்தப் பொருள் அனைத்தும் ஆலயமாய்ச் சேரும் இடம் மனிதன். அவனைத்தான் காவியப் பெண் அன்றிலிருந்து காதலில் கட்டிவிட நினைக்கிறாள். கைக்கிளையாய் ஆகிவிடுமோ என்று பெருமூச்சு எறிகிறாள். உலகின் பல மூலைக்கும் சென்று இரவுக்குறியும் பகற்குறியும் வைக்கிறாள். வந்தாய் போலே வாராதாய் என்று ஏங்குகிறாள். வாராதாய் போல் வருவானே என்று எதிர்நோக்குகிறாள். பாங்கரும் விறலியரும் பரிந்து சென்ற பெரியோரும் இன்னும் திரும்பிய பாடில்லை. எத்துணையோ சிற்றில் இழைத்துச் சிணுங்குகிறாள். சிதைத்து அந்தச் செல்வன் சிந்தை மகிழ்விப்பான் என்று காலத்தின் அத்துவாக்கள் எங்கும் விழி வைத்து நோக்குகிறாள். உள்ளம் கவர் கள்வனை உருவெழுதிப் பூத்த உவகையில் உடல் நனைகிறாள். என்றும் நெட்டுயிர்ப்பே இவள் பங்காய் அந்தப் பெருந்தகையோன் திரிகின்றான் தனைமறந்து, பாடிவீடெங்கும், தன்னும் உருவும் பெயரும் நினைவயர்ந்து.
இதை நீங்கள் நன்கு புரிந்துகொண்டால் காவியத்தையும் செவ்வனே புரிந்து கொள்ளலாம். உங்கள் ஆர்வம் கரை இகந்து முந்தும் ஆயினும் இது வெறுமனே முன்னூட்டுச் சுவைக்கதிர் தானே! முனியாது பொறுத்திடுக! முற்றுறும் நாள் முதிராத முத்தி எழிலை முகிழ்த்த நூலாக்கித் தந்திடுவேன்.
நடையைப் பொறுத்த வரையில் மரபின் வழீஇய யாப்பா? உரையா? புதுக்கவிதையா? விடுதலைப் பாசுரமா? குவி நுண்கண்ணியா? என்று எவ்வகை அளவுகோலும் கைக்கொள்ளாது கவிப்புள்ளைச் சுதந்திரமாகக் கூவ விட்டிருக்கிறேன். கூறு தமிழ்ப் பாவலரும், புதுக்கவிதைப் போக்குவரத்தாரும் நகை தள்ள எள்ளுவரேல் அதுவும் நன்றே.
These are the beginning lines of the epic, setting the mood and tone. I have begun to be at this work again. Hope it will go on. Sudden bouts of my own dejection and loss of interest are professional hurdles. Hope to sail along. Just for your eyes. Kindly don't share or make any post out of it. I am not being fussy. But this may be changing a lot along the way, so why fix it as such...
வாழ்வின் விடிவெள்ளி பிலிற்றும் கதிர்தோய்க்
காலக்கரும்புனல் கருத்தோடிக் காணாவான் கருசுமந்து
பால்நிறப் பைந்தடப் பரத்தின் பள்ளிக்கட்டில்
மாலாகி மகத்தில் ஆயிரமாய்த் தலைவிரிய
மூலத்தூண் உதைத்து முட்டித்த முன்னூக்கம்
காலத்தூள் பரப்பிக் கண்விரித்த சையோகம்
ஒலியில் உருவாகி உருகடந்த மெய்யாகி
மெய்யாக்கும் பொய்யா புலத்தின் வித்தாகிச்
சூழும் கோலத்தின் சுயத்துட் செறிந்து
பாழில் விரிந்த பைங்கமலத் தண்தீயில்
ஏழாய்ப் படிந்து எழுந்த எழில்யோகு
ஊழாய் விடிந்த உன்மத்தக் கணமொன்று.
கல்லுருகிக் காற்றாய்க் கலந்து
காரிருளின் காட்சியற்ற கதிராய்க்
ககன வெளியற்ற உள்ளாய்ப்
பெயருரு பிறங்காப் படைப்பின் முற்கணக் குழம்பாய்
உயிரின் அண்மைக்குள் ஒருபெரும் தொலைவாய்
உற்றறி கருத்தின் அரும்பா முனைவாய்
அறியா பரப்பில் கூறுகள் குலையா
இயலும் தகையாய் இயற்றா தொகையாய்ப்
பயிலும் பரநதி புலமாய் விரிய
படைப்பின் உருக்கோவை பெயர்ப்பனுவல் குவையோடு
பக்குவமாய்ப் புணர்ந்திசைய பூரித்த பொன்வேளை
பொழுதசைய உழுபுலத்தின் கொழுவாய்
அகமாகிப் புறமாகா அண்டமுன் அவத்தையினில்
திறலும் விரிவும் இருப்பின் களிப்பும்
வேக வளையாய் விறலாய்க் கெழுமி
விரவிய தம்முள் வித்திட விளைந்த
விண்ணின் மண்ணாய்ப் பூத்தது வானம்.
வானின் வடிவச் செதில்பரல் குழைந்து
வேகத் தண்ணளி விண்பூப்புறைய விரைவின் நிகழாய்
ஒன்றைக்கடந்த பலவின் வீச்சாய்த்
திரைகொள் முரணாய் மாற்றவளியாய்த்
தடம்படு காற்று திறல்சூல் கவ்வத்
திறல்முற்றித் தீயாகித் தெய்வத் தண்ணளியாய்த்
தருநீர்மை நீராகித் தரைகொண்ட கருவில்
உருவாகி உணவாகி உயிராகி உடல்கொண்ட
உணர்வாகி ஒன்றாக பலவாகும் ஒருஜீவன்
ஒரு முட்டை அணுத்தட்டை
ஒன்றிற்குள் உருவாகும் ஓரிரட்டை
ஒன்றைப்போல் ஒன்றாகி வேறாகி பலவாகி
மாறாகிப் பெருகிவந்த வையம்
கூறாகிக் கோணணுவின் கோப்பாகிக்
கொண்ட வடிவின் கூடிவந்த குணமாகிக்
குணம்தொடுத்த தொடர்பாகித்
தொடர்பாலே பல்திறனாய்த் தோற்றமாய்த்
தொடநின்ற தேற்றமாய்த் திரண்ட
பொருளாய்த் தழைத்த மையம்
பலவான இயல்பாட்டில் பொருத்தமுறக் கூடியவை
பருண்மையாய்ப் பொதுளிய நிலையம்
ஆகாத சாத்தியங்கள் அண்டப் பொதுசத்தாகி
ஆடாத திறல்செறிவு அலையாகி
அலையாத பொதுவில் கோடாத பொருளுக்கு
அரும்பாகி உருவற்ற பொருள்முயக்கம்
கருக்கொண்டு வெளியாக்கி
வடிவோடு தொலைவும் வரும் போகும் நிகழ்வும்
வடிவற்ற நிகழ்கண நடுக்குறு விரைவும்
காணாத காட்சியின் கண்ணற்ற பார்வையில்
கோணாத கோலமாய்க் கொண்டுதிகழ் கருத்தாகிப்
புலப்பட வெளிப்படு படைப்பிடைப் புடைப்பொடு
புரிபட புறப்படு ப்ரபஞ்சமாய் ஆனதும்
நீராகி நிலனாகி நிதானமாய்
நின்றெரியும் கதிராகி நிலவுமாய்
நில்லாத பருவமாகி நீட்சியாய்க் குறுக்கமாய்
நிவந்துடன் ஆழ்ந்துபின் அகன்றலர் இயக்கமாய்
உவந்தபேர் தொடர்ச்சியாய் உருகெழு வாழ்க்கையாய்
உற்றதொரு வைய நாப்பண் ஓரூர்.
அலைமீது ஏறிவந்த ஆற்றல்
பாழின் வாய்புகுந்து பொருளாகித் தோற்றுக்
குலைந்தவலை கொண்டையினில் மின்ன
குலையாத உயிரோடுயர்ந்து
உணர்வாகி உற்றமனமென்ன
ஊரை வளைத்துவரும் ஆற்றில்
உயிர்திகழும் பயிர்ப்பான பசுமை
உணர்வாகித் துயில்கொள்ளும் கருமை
விழிபயிலும் அறியோகு புணர்வில்
செழிக்கின்ற திருவாகிச் செவ்வான்
பழிக்கின்ற தருக்கிளையில் பயிலும்
மொழிக்கிள்ளை மிழற்றுமொரு தீஞ்சொல்
தரங்கம் ரங்க ரங்கா அரங்க மரங்க ளுறங்கும்
உறங்காத சான்றாகி உருளும் காலம்
அறங்கா வலாகி அயரும் வேளை
எண்கோண மூவுருளை எந்திர மாயையொன்று
கண்காணாக் காம்பில் கறங்கும் நின்று
பொய்யாய் வடித்த புத்தமுதம் பொருளில் படிந்து
பையவெழுந்த பல்வடிவாம் பசப்பின் மெய்யில்
தைவந்த நாவின் தீர்க்கம் சுழித்துச்
சுட்டும் நுனியாய் எந்திரச் சுரும்பில் ஆர்க்கும்
இருட்டுக் குளம்பாய் ஒளியின் தடமொத்தும் தமப்பாழ்
சுருளாகி விரிநாக சுரமுழைக்குள் பதுங்கும்
ஒலியென்றும் ஒலியற்ற வெளியென்றும்
திரண்டஒரு கோளம் பொரித்துப்
புறவோடு பொன்சிவப்பாய் வான்தடவ
விரித்து வெளிப்போந்த வியன்புள் விரிசிறகு
முன்னசை ஓசையாய்க் குரலாய் முடுகிய
சிறகின் நீழல் சொல்லும் பொருளுமாய்ச்
சிவணிய சிலிர்ப்பில் சென்றந்த முழையை நோக்கும்.
நோக்கரிய நுண்ணுணர்வின் நுகத்தடி
நுவலா நன்மையின் நறவத் தீஞ்சுவை
நயக்கும் வாக்கில் கால்வைத்து வரைகடந்தெழுந்த பரத்தின்
போக்கரிய பதமாய்ப் புக்கரிய நிலையாய்ப்
பூரித்த புதுவிண் பூரணம் திளைப்ப
பூவா மலரின் மோவா நாற்றம்
பொன்றா விசையாய்ப் புலத்தில் புரிய
ஒன்றிய உணர்வின் குருத்தில் ஓயா
ஒற்றைக் கண்ணும் இமையா முனைப்பும்
இரட்டையைத் தன்னுள் இயற்றிட இயைந்த
ஏகம் ஆங்கண் இயன்றது தூணாய்.
Srirangam Mohanarangan
***